தினமணி 08.10.2010
பழனி நகராட்சி சார்பில் பன்றிகள் பிடிப்பு
பழனி, அக். 7: பழனியில் நகராட்சி சார்பில் பன்றிகள் பிடிக்கப்பட்டு, நகருக்கு வெளியே கொண்டு சென்று விடப்பட்டன . பழனியில் பாளையம், அடிவாரம், கிரி வீதி உள்ளிட்ட பல வார்டு பகுதிகளில் பன்றிகள் கூட்டம் கூட்டமாகச் சென்று சாக்கடையை கிளறி நோய்களை பரப்பிய வண்ணம் இருந்தன.
இந் நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் நகராட்சி சார்பில் நகரில் சுற்றித் திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டன. இதற்காக கோவை மாவட்டத்தில் இருந்து பன்றிகளைப் பிடிக்கும் 15 பேர் கொண்ட குழு வலையுடன் அழைத்து வரப்பட்டது.
காலை முதல் பழனி நகரின் பல்வேறு பகுதிகளில் 65 பன்றிகள் பிடிக்கப்பட்டன. இவை பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாத பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டன. பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆகியோர் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, நெடுமாறன், மணிகண்டன், மதுரைவீரன், சையது அபுதாகீர் உள்ளிட்ட பலர் இப் பணியில் ஈடுபட்டனர்.