தினமணி 11.10.2010
குப்பைகளைக் கொட்ட இடமில்லாத மணப்பாறை நகராட்சி
அ. தமிழ்மாணிக்கம்
மணப்பாறை,அக். 10: திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமின்றி நகராட்சி நிர்வாகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகத்துக்கு உள்பட்ட 27 வார்டுகளில் உள்ள வீடுகளில் தினந்தோறும் கொட்டப்படும் குப்பைகள் தெருக்களில் குவியல், குவியலாகத் தேங்கிக் கிடக்கின்றன. சில தெருக்களில் நகராட்சி மூலம் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளிலும் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இந்தக் குப்பைகளை எங்கே கொட்டுவது என்பது தெரியாமல் துப்புரவுப் பணியாளர்கள் தடுமாறி வருகின்றனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு பாரதியார்நகர் பகுதியில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டன. அங்கு குப்பைகளைக் கொட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும், தீவிரப் போராட்டங்கள் நடத்தியதால் அங்கே குப்பைகளைக் கொட்டுவதை நகராட்சி நிர்வாகம் நிறுத்தியது.
இந்நிலையில், திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் மலை, மலையாகக் கொட்டப்பட்டது. அந்த இடத்திலும் குப்பைகளைக் கொட்டுவதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், குப்பைகளை எரியூட்டம் செய்யும் போது ஏற்படும் புகை மூட்டம் சுற்றுச் சூழலை பெரிதும் பாதித்தது.
இதுதவிர, புகை மூட்டத்தால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலையும் உருவானது. மேலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்த இடத்தில் குப்பைகள் கொட்ட இயலாத நிலை ஏற்பட்டது. இதனால், நகராட்சி லாரிகளில் அள்ளப்படும் குப்பைகள் பெரும்பாலும் திண்டுக்கல் சாலை, திருச்சி சாலை மற்றும் 10-வது வார்டு பகுதியில் உள்ள ஒரு கிணறு என ஆங்காங்கே தாற்காலிகமாக கொட்டப்படுகின்றன.
இவ்வாறு பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் நகரம் முழுவதும் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டது. இது தொடர்பாக நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பல முறை புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நகராட்சி நிர்வாகம் திருச்சி சாலையில் கே.பெரியபட்டி அருகே 10 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியது. அதில், குப்பை கொட்டுவதற்கும், குப்பைகளை மட்கச் செய்யும் இயந்திரக் கட்டுமானத்தையும் தொடங்க முற்பட்டனர். அந்தத் திட்டத்தின் தொடக்க நிலையிலேயே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் பணிகளும் தற்போது நின்றுவிட்டது. இதையடுத்து, குப்பைகளை எந்த இடத்தில் கொட்டுவது என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர இயலாமல் நகர நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் அருணாச்சலம் கூறியது:
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் செவலூர் பிரிவு சாலையருகே கொட்டப்பட்டன. அது சுற்றுச் சூழலுக்கு கெடுதலாக அமைந்ததால், கே.பெரியபட்டி அருகே 10 ஏக்கர் நிலத்தை தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கி, அதில் பணிகளைத் தொடங்க உத்தேசித்தோம்.
இதற்கு அப்பகுதி மக்கள் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தத் திட்டத்தை கைவிட்டு விட்டோம். மீண்டும் நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி முடிவெடுக்கப்படும். அதுவரை பழைய இடத்திலேயே குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். சாலை ஓரங்களில் குப்பை கொட்டும் நடவடிக்கை இனி தொடராது என்றார் அவர்.
பொது சுகாதாரம் முறையாக இல்லாததால் பன்றிக் காய்ச்சல், மலேரியா, டைபாய்டு என நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது. அதற்குப் பிரதானமாக இருப்பது கொசுக்களின் அசுர வளர்ச்சியே காரணம். அத்தகைய கொசுக்களை உற்பத்தி செய்யும் குப்பைகளை பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கு அப்பாலும், பாதுகாப்பாகவும் கொட்டுவது அவசியம்.
நீண்ட நாள்களாக மணப்பாறையில் நிலவி வரும் இந்தப் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நிரந்தரமாக குப்பைகளைக் கொட்ட மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.