தினமணி 14.10.2010
கொண்டலாம்பட்டி பகுதிகளில் பழைய டயர்கள் அகற்றம்
சேலம், அக். 13: சேலம் மாநகரில் கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பஞ்சர் கடைகளில் இருந்த பழைய டயர்கள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த சில நாள்களாக மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் தடுக்க வேண்டும் என்றும் பகல் நேரத்தில் கொசுக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சேலம் மாநகரில் தேங்கியிருக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோரத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள், பஞ்சர் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பழைய டயர்களை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
டயர்களில் தேங்கியிருக்கும் மழை நீரில் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்தார்.
அன்னதானப்பட்டி, சங்ககிரி மெயின் ரோடு, செüடேஸ்வரி கல்லூரி, கொண்டலாம்பட்டி பை–பாஸ், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள் சுமார் ஒரு லோடு அளவுள்ள டயர்களைப் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.