தினகரன் 18.10.2010
ரூ.25 கோடியில் நடைபெற உள்ள குடிநீர் திட்ட பணிக்கு இடம் தாந்தோணி நகராட்சி கலெக்டருக்கு வலியுறுத்தல்கரூர், அக். 18: தாந்தோணி நகராட்சியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்காக வருவாய்த்துறை இடங்களை நகராட்சிக்கு அளிக்க கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தாந்தோணி நகராட்சியின் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்காக தயார் செய்யப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.25.16 கோடிக்கு அரசாணைப்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேற்கொண்டு செய்து முடிக்க உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்ட மதிப்பீட்டில் கட்டளை பகுதியில் தலைமை நீரேற்று நிலையம், தாந்தோணி நகரில் பல்வேறு கொள்ளளவு கொண்ட 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் நீர் உந்து நிலையம், நீர் சேகரிப்பு கிணறு, நீரேற்று குழாய்கள், பகிர்மான குழாய்கள் பதித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நீர்த்தேக்கத் தொட்டிகள், நீரேற்று நிலையம், நீர் உந்து நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட கீழ்காணும் இடங்களை நகராட்சி வசம் பெற்று குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளுக்கு பயன்படுத்த கலெக்டரிடம் அனுமதி கோரப்பட்டது. தாந்தோணி நகராட்சி தலைவி ரேவதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நீர் சேகரிப்பு தொட்டி கட்டுதல், பொன்நகரில் குடிநீர் தொட்டி கட்ட தேவைப்படும் பரப்பரளவு 50 சென்ட், காந்தி கிராமத்தில் (சக்தி நகர்) மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட தேவைப்படும் 50 சென்ட், செல்லாண்டிபாளையத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு தேவைப்படும் 50 சென்ட், தோரணக்கல்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட தேவைப்படும் 50 சென்ட், கலெக்டர் அலுவலகம் பின்புறம் வெங்ககல்பட்டியில் நீர்த்தேக்க தொட்டி கட்ட தேவைப்படும் 50 சென்ட் இடங்கள் வருவாய்த்துறை பராமரிப்பில் தற்போது உள்ளது. இந்த குடிநீர் திட்ட பணிகளுக்கு தேவையான இடங்களை ,தேவையான விஸ்தீரணத்தில் சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு இடங்களை நகராட்சி பெறுவது என நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.