தினமலர் 20.10.2010
“பஸ் ஸ்டாண்ட் சுரங்க நடைபாதை ஒரு மாதத்திற்குள் நிறைவு பெறும்’
பொள்ளாச்சி:”பொள்ளாச்சியில் இரண்டு பஸ் ஸ்டாண்டுகளையும் இணைக்கும் சுரங்க நடைபாதை பணிகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு பெறும்‘ என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சியில் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரிலேயே புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இரண்டு பஸ் ஸ்டாண்டிற்கும் செல்வதற்கு மக்கள் ரோட்டை கடந்து செல்வதால் விபத்து ஏற்படும் என்பதால், சுரங்க நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
சுரங்க நடைபாதை அமைக்க நகராட்சி நிர்வாகம் 40 லட்சம் ரூபாயை நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்கியது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இரண்டு பஸ் ஸ்டாண்ட்களையும் இணைக்க 25 மீட்டர் நீளத்திலும், 3.6 மீட்டர் அகலத்திலும், மூன்று மீட்டர் உயரத்திலும் சுரங்க நடைபாதை அமைக்கப்படுகிறது.பக்கவாட்டு கான்கிரீட் சுவர்கள், மேல் தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சுரங்க நடைபாதையினுள் மக்கள் இறங்கி ஏறும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. சுரங்க நடைபாதைக்கான கான்கிரீட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததால் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ஒருபக்கம் போக்குவரத்திற்கு ரோடு திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் முடிந்ததும் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், “சுரங்க நடைபாதை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதால் “டைல்ஸ்‘ பதிப்பது உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. நடைபாதை அமைக்கும் பணிகள் முடிந்ததும் பயணிகள் நடந்து செல்வதற்கும், பஸ் ஸ்டாண்ட் ரோடு வாகன பயன்பாட்டிற்கும் திறந்து விடப்படும். சுரங்க நடைபாதை பணிகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு பெறும்‘ என்றனர்.