தினமலர் 10.11.2010
சென்னையில் ரூ.450 கோடியில் 4 பாலங்கள் அமைக்க முடிவு
சென்னை : சென்னை பெருநகர வளர்ச்சி பகுதியில், முன்னுரிமை அடிப்படையில் நான்கு மேம்பாலப் பணிகளை 450 கோடி ரூபாயில் அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க, அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இதில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 300 கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி பகுதியில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட போக்குவரத்து வசதி பணிகளில் சிலவற்றை முதற்கட்டமாக தேர்வு செய்து, அவற்றுக்கு ஆலோசகர்களை நியமித்து, திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதிக்குமாறு, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர், அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி, நான்கு இடங்களில் திட்ட மதிப்பில் 1 சதவீதத்துக்கு மிகாமல், தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் திட்ட நிதியை பயன்படுத்தி, திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசகரை நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நான்கு மேம்பாலங்கள் அமைக்கப்படும் இடங்கள் வருமாறு:
* ஜி.எஸ்.டி., சாலையில் பல்லாவரத்தில் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.65 கோடி மதிப்பில் மேம்பாலம்.
* வேளச்சேரியில் விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச் சாலைகள் இணையும் இடத்தில் ரூ.50 கோடியில் மேம்பாலம்.
* உள்வட்ட சாலையில் கொளத்தூர் அருகே ரெட்டைஏரி பகுதியில், பெரம்பூர் – செங்குன்றம் சாலை சந்திப்பில் ரூ.50 கோடியில் மேம்பாலம்.
* ஈ.வெ.ரா., நெடுஞ்சாலையில் (பூந்தமல்லி நெடுஞ்சாலை) ராஜாமுத்தையா சாலை சந்திப்பு முதல், அமைந்தகரை புல்லா அவென்யூ சந்திப்பு வரை உள்ள சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.300 கோடியில் மேம்பாலம். இவ்வாறு நான்கு மேம்பாலங்களை மொத்தம் 465 கோடி ரூபாய் மதிப்பில் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு, நிர்வாக ஒப்புதல் அளித்து, நெடுஞ்சாலைத் துறை செயலர் சந்தானம் உத்தரவிட்டுள்ளார்.