தினமலர் 16.11.2010
“திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி’
திருப்பூர்: “”மக்கள் நலத்திட்டங்களை செயல் படுத்துவதில், மற்ற மாநிலங்களுக்கு முன் னோடியாக தமிழக அரசு விளங்குகிறது,” என அமைச்சர் சாமிநாதன் பேசினார். நல்லூர் நகராட்சி 10வது வார்டு ஆர்.கே., கார்டன், 12வது வார்டு காளி யப்பா நகரில் ரேஷன் கடை திறப்பு விழா மற்றும் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நேற்று நடந்தது. ஆர்.கே., கார்டனில், எம்.எல்.ஏ., நிதி மூன்று லட்சம் மதிப்பில் சொந்த கட்டடம் கட்டப் பட் டுள்ளது. ஆர்.கே., கார்டனில் பகுதிநேரம், காளியப்பா நகரில் முழுநேர கடையாக இயங்குகிறது. நகராட்சி பகுதியில் மூன்றாம் கட்டமாக, ரூ.6.66 லட்சம் மதிப்பில் 476 இலவச காஸ் அடுப்பு வழங்கப்படுகிறது. ரேஷன் கடை திறப்பு விழாவுக்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமமூர்த்தி; இலவச அடுப்பு வழங்கும் விழாவுக்கு நகராட்சி தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தனர். மேயர் செல்வராஜ், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் சாமிநாதன், ரேஷன் கடையை திறந்து வைத்து, பொருள் வினியோகம் மற்றும் பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கும் பணியை துவக்கி வைத்தார். அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: இலவச காஸ் அடுப்பு கிடைக்காத 720 கார்டுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்ததும் விரைவில் இணைப்பு வழங்கப்படும். தமிழக அரசின் திட்டங்களை பின்பற்ற, மற்ற மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவில், கிலோ 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, தமிழகம் விளங்குகிறது. உலகளவில் ஊட்டச்சத்து பற்றாக்குறையில், இந்தியா 44வது நாடாக உள்ளது. மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து முட்டை கிடைக்கிறது. இலவச “டிவி‘, கான்கிரீட் வீடு, சுழல்நிதி, பெண்களுக்கான உதவி என பல்வேறு திட்டங்களை அரசு செயல் படுத்துகிறது. இவற்றை பயன்படுத்தும் போது, மக்கள் முதல்வரை நினைக்க வேண்டும். இவ்வாறு, அமைச்சர் சாமிநாதன் பேசினார். கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ராமமூர்த்தி, கலால் உதவி ஆணையர் பாண்டிபெருமாள், துணை தலைவர் நிர்மலா, செயல் அலுவலர் (பொறுப்பு) குற்றாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.