தினமலர் 18.11.2010
தேனி நகராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு மூன்று மண்டலங்களாக பிரித்து சப்ளை செய்ய முடிவு
தேனி
: தேனியில் குடிநீர் சப்ளையினை சீரமைக்க நகராட்சி பகுதி முழுவதையும் மூன்று மண்டலங்களாக பிரிக்க கலெக்டர் முத்துவீரன் உத்தரவிட்டுள்ளார். தேனி– அல்லிநகரம் நகராட்சி பகுதி தற்போது குடிநீர் சப்ளைக்காக 85 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தேவைக்கு ஏற்ற அளவு குடிநீர் கிடைத்தும் முறைப்படி சப்ளை செய்ய நகராட்சி அதிகாரிகளால் முடியவில்லை.நகரின் தற்போதைய குடிநீர் சப்ளை குழாய் செல்லும் வழித்தடங்கள் குறித்த தெளிவான விபரங்கள் எதுவுமே நகராட்சியில் இல்லை.இதனால் ஏதாவது ஒரு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்தாலும் நகராட்சியால் கண்டுபிடித்து சரி செய்ய முடியவில்லை
. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கலெக்டர் முத்துவீரன் நகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, குடிநீர் சப்ளையினை முறைப்படுத்த உத்தரவிட்டார். நகராட்சி தற்போது குடிநீர் சப்ளைக்காக 85 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லா மண்டலங்களுக்கும் குறிப்பிட்ட நேரம் வீதம் குடிநீர் சப்ளை கொடுத்து வர வேண்டி உள்ளதாலும் ஐந்து நாளுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்ய முடிகிறது. கூடுதல் நேரம் இருந்தும் சப்ளை செய்ய முடியவில்லை. இந்த பிரச்னையை தீர்த்து சப்ளையை சீரமைக்கும் வகையில் நகராட்சி பகுதி முழுவதையும் மூன்று மண்டலங்களாக பிரித்து, இதற்கேற்ற வகையில் கூடுதல் குடிநீர் தொட்டிகளை அமைத்து சப்ளை செய்தால், தற்போது உள்ள நீர் ஆதாரங்களில் இருந்தே தினமும் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என உத்தரவிட்டுள்ளார். இதற்கு 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வைகையில் இருந்து குடிநீர் கொண்டு வருவது உடனடியாக சாத்தியமில்லாத நிலையில், பகிர்மானத்தை சீரமைப்பதன் மூலம் சப்ளையினை அதிகரிப்பதன் மூலம் தேனி நகரின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.