தினமலர் 06.12.2010
தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் புதிய அலுவலர்கள் நியமிக்கவில்லை
ஆத்தூர் : தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் இதுவரை அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ்நாடு நகராட்சிகள் விதிகள்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் நகராட்சிகளை தரம் பிரித்து அரசு அறிவித்தது. அதன்படி 10 கோடி ரூபாய் வருவாய் கொண்ட நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சியாகவும், ஆறு முதல் 10 கோடி ரூபாய் வரை வருவாய் உள்ள நகராட்சிகள் தேர்வு நிலை நகராட்சியாகவும், நான்கு முதல் ஆறு கோடி ரூபாய் வருவாய் கொண்டவை முதல் நிலை நகராட்சியாகவும், நான்கு கோடி ரூபாய்க்கு குறைவான வருவாய் கொண்டவை இரண்டாம் நிலை நகராட்சிகளாகவும் தரம்பிரிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள 49 மூன்றாம் நிலை நகராட்சிகளில் 36 நகராட்சிகளை தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனுடன் 2006 முதல் 2009ம் ஆண்டு வரையிலான வரவு – செலவு கணக்கு விவரங்களும் நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. அதை பரிசீலனை செய்த அரசு, 36 நகராட்சிகளை தரம் உயர்த்த முடிவு செய்தது. அதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக முதன்மை செயலர் அசோக் வரதன் ஷெட்டி வெளியிட்டார்.
அந்த உத்தரவில் மறைமலை நகர், குறிச்சி ஆகியவை சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பம்மல், திருவேற்காடு, இனாம்கரூர், கவுண்டம்பாளையம், குனியமுத்தூர், வால்பாறை ஆகியவை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மூன்றாம் நிலை நகராட்சிகளான பூந்தமல்லி, கள்ளக்குறிச்சி, தாந்தோணி, அவனியாபுரம், திருப்பரங்குன்றம், பல்லடம், திருத்தங்கல் ஆகியவை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம் நரசிங்கபுரம், பள்ளிப்பாளையம், அரியலூர், ஜெயம்கொண்டம், துவாக்குடி, ஜோலார்பேட்டை, அனகாபுத்தூர் உள்ளிட்ட 21 மூன்றாம் நிலை நகராட்சிகள், இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன. தரம் உயர்த்திய நகராட்சிகளில் நான்கு மாதத்துக்கு மேலாக கமிஷனர், பில் கலெக்டர், இன்ஜினியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் புதிதாக நியமிக்கப்படாமல் உள்ளது. மூன்றாம் நிலை நகராட்சியில் பணிபுரிந்து வந்த செயல் அலுவலர்களே, அலுவலக பணிகளை செய்து வருகின்றனர்.