தினமணி 08.12.2010
சுற்றுச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல்: ரத்துசெய்யக் கோரிய மனுக்கள் தள்ளுபடி
மதுரை,டிச. 7: மதுரை உத்தங்குடி–கப்பலூர் சுற்றுச்சாலையில் வாகனங்களுக்கு மதுரை மாநகராட்சி சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடைவிதிக்கக் கோரிய மனுக்களை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக, விருதுநகர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கச் செயலர், மதுரை மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் விவரம்:
மதுரை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் தவிர்க்கும் வகையில் உத்தங்குடியிலிருந்து, கப்பலூர் வரையில் சுற்றுச்சாலை 29 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ.47.35 கோடி மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சி அமைத்தது. இதற்கான செலவுத் தொகையை வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் மூலம் வசூலித்து ஈடுசெய்யவும் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு நகர்புற மேம்பட்டுத் திட்ட நிதியிலிருந்து கடனாக ரூ. 33.35 கோடியும், தமிழக அரசிடமிருந்து ரூ.14 கோடியும் சாலை அமைக்கப் பெறப்பட்டது.
இந் நிதிக்கான வட்டியும், சாலைப் பராமரிப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கும் சேர்த்து ஐந்து ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப் போவதாகக் கூறப்பட்டது. சாலை 2000-ம் ஆண்டில் திறக்கப்பட்டது.
தற்போது 10 ஆண்டுகளாக சுங்கம் வசூலிக்கப்படுகிறது. எனவே, சுங்கம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் என மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், மதுரை மாநகராட்சி சாலை அமைப்பதற்கு செலவான நிதியை 15 ஆண்டுகளுக்கு வசூலித்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.