தினமணி 15.12.2010
“கொசுவை ஒழிப்பதில் மக்களின் பங்கு அவசியம்’: மேயர் மா. சுப்பிரமணியன்
சென்னையில் கொசு ஒழிப்புத் தீர்மானங்கள் குறித்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கொசு ஒழிப்பு பிரமுகர் அட்டைகளை வழங்குகிறார் மேயர் மா. சுப்பிரமணியன்.
சென்னை, டிச. 14: கொசுக்களை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்களின் பங்கு மிகவும் அவசியம் என சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
எக்ஸ்னோரா அமைப்புடன் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்திய “கொசு ஒழிப்பு தீர்மானம்‘ குறித்த நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அவர் பேசியதாவது:
மனிதர்களின் உயிரையே பறிக்கும் மிகவும் அபாயகரமான நோய்களை வேகமாக உண்டாக்குவதில் கொசுக்களுக்கே முதலிடம். கொசுக்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது நமது நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு கொசுவின் இனப்பெருக்க காலத்தில் அது ஆயிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறது. எனவே கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால் அவற்றின் உற்பத்தியைக் குறைக்க முடியும்.
கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம். வீட்டின் பின்பகுதியில் தண்ணீரைத் தேங்க விடுவது, சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருத்தல், கிணறுகளை பராமரிக்காமல் விட்டுவிடுதல் உள்ளிட்ட சில காரணங்களால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகி விடுகிறது.
எனவே இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியாவிட்டாலும், கொசுவின் உற்பத்தியைத் தடுக்கும் விதத்தில் நாம் செயல்பட முயற்சி செய்ய வேண்டும். இந்த பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த சென்னை மாநகராட்சி, மாநகரில் பல கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன்படி, சென்னையில் உள்ள பேருந்து சாலை, உட்புறச் சாலை உள்ளிட்ட அனைத்துச் சாலைகளிலும் ஒரே நேரத்தில் கொசு ஒழிப்பு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னையில் உள்ள அனைத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
236 கொசு ஒழிப்பு வாகனங்கள், 9 கைத் தெளிப்பான்கள், 20 கால் தெளிப்பான்கள், 9 கட்டுமரங்கள், 6 படகுகள் உள்ளிட்டவை இந்த கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. முக்கியமாக வெளிநாடுகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எப்படி செயல்பட்டு வருகிறது என்பதைக் கண்காணித்து அதனை இங்கே செயல்படுத்தும் பொருட்டு தண்டையார்பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கொசுக்களை ஒழிப்பதில் மாநகராட்சி உள்ளிட்ட அரசுத் துறைகள் செயல்பட்டால் மட்டும் போதாது. அவர்களுடன் இணைந்து பொதுமக்களும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே கொசு ஒழிப்பு குறித்த சில நடவடிக்கைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சென்னையில் உள்ள சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பு பிரமுகர் அட்டை வழங்கப்படும். அந்த மாணவர்கள் தங்கள் வீடுகள் மட்டுமன்றி தங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கும் இந்த விழிப்புணர்வை எடுத்துக் கூறுவார்கள். இதனைப் பின்பற்றினாலே கொசு ஒழிப்பு நடவடிக்கை வெற்றிப் பெறும் என்றார் அவர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், துணை ஆணையர் (சுகாதாரம்) ஆசிஷ்குமார், நடிகர் எஸ்.வி. சேகர், எக்ஸ்னோரா தலைவர் எம்.பி. நிர்மல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.