தினகரன் 17.12.2010
ஆசிய விளையாட்டு கபடி பிரிவில் தங்கம் வென்ற வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசு
மாநகராட்சி நிலைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு அதன் தலைவர் யோகேந்தர் சந்தாலியா தலைமை தாங்கினார். இதில், பா.ஜ. உறுப்பினர் விஜய் பண்டிட் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
சமீபத்தில் சீனாவின் குவாங்சோ நகரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கபடி அணி தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தது.
அந்த அணியில் டெல்லி பாலம் கவோனை சேர்ந்த பூஜா சர்மா, நிஜாம்பூர் கவோனைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் மஞ்சித் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
உலக மல்யுத்த சாம்பியனாக திகழும் சுசில் குமாரை மாநகராட்சி பாராட்டி கவுரவித்தது போல இந்த கபடி வீரர்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் வழங்கி பெருமைப்படுத்த வேண்டும்.
இவ்வறு தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதன் பிறகு நிருபர்களிடம் யோகேந்தர் சந்தாலியா கூறுகையில், ‘கபடி விளையாட்டு வீரர்கள் மூவருக்கும் மாநகராட்சி சார்பில் தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும். இதற்கான பாராட்டு விழா விரைவில் நடத்தப்படும். இதன் மூலம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் மாநகராட்சி பாரபட்சம் காட்டவில்லை என்பது நிரூபணமாகும்’ என்றார்.