தினமலர் 22.12.2010
மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல் எதிரொலி போலீஸ் பாதுகாப்புடன் வரி வசூலிக்க முடிவு
மதுரை:மதுரை மாட்டுத்தாவணி விறகு பேட்டையில், வரி செலுத்தாததால் “சீல்’ வைக்கப்பட்ட கடையை திறக்க கோரி, மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் விறகு பேட்டையில், வரி செலுத்தாத 26 கடைகளுக்கு மாநகராட்சி “சீல்’ வைத்தது. இதைதொடர்ந்து, நேற்று வரி வசூலிக்க சென்ற ஊழியர் விஸ்வநாத்திடம்(31), “சீல்’ வைத்த கடையை திறக்குமாறு கோவிந்தராஜ் என்பவரும், அவரது மகனும் வாக்குவாதம் செய்தனர். பின், விஸ்வநாத் கன்னத்தில் அவர்கள் அறைந்ததால், காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.
அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கோவிந்தராஜ், அவரது மகன் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பு தலைவர் முகமது ரபீக் கூறுகையில், “”அதிகாலை 6 மணி, இரவு 8.30 மணிக்கு வரி வசூலிக்க செல்வதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வசூல் பணத்தை கொண்டு செல்லும்போது யாராவது வழிப்பறி செய்தால் என்ன செய்வது? இனி, “போலீஸ் பாதுகாப்பு இருந்தால்தான் வரி வசூலிக்க செல்வோம்’ என மாநகராட்சி கமிஷனரிடம் தெரிவித்துள்ளோம்,” என்றார்.