தினமலர் 11.01.2011
லே-அவுட்களுக்கு காம்பவுண்ட் அமைக்க…அனுமதியில்லை! : நகர ஊரமைப்பு இயக்குனர் திட்டவட்டம்
கோவை : “லே-அவுட் அனுமதி பெற்ற இடங்களைச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்ட அனுமதியில்லை’ என, நகர ஊரமைப்பு இயக்குனர் பங்கஜ்குமார்பன்சால் தெளிவுபடுத்தியுள்ளார். கோவை உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தில், நகர ஊரமைப்பு இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் மக்கள் குறை கேட்பு முகாம் நடத்தினார். தகவலறிந்து, கோவை திருச்சி ரோடு தனலட்சுமிபுரம் அருகேயுள்ள “ஸ்ருதி என்கிளேவ்’ குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள்,பங்கேற்றனர். அந்த குடியிருப்பில் தொகுப்பு வீடுகளுக்கு வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மாறாக, இடங்களை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக, உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர் சார்பில் ஒரு வாரக்கெடு வழங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. திட்டச்சாலை மற்றும் பொது ஒதுக்கீட்டு இடங்களை ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்காவிட் டால் “சீல்’ வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. கடந்த 30ம் தேதியன்று அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், வீடுகளுக்குச் செல்ல முடியாத வகையில் “சீல்’ வைக்கப்படுமோ என்ற அச்சத்தில் பெண்கள் பலரும் வந்திருந்தனர். பன்சாலை நேரில் சந்தித்து நோட்டீஸ் விபரத்தைக் கூறி, கருத்துக்களையும் தெரிவித்தனர். குடியிருப்பின் பின்புறமுள்ள நிலங்களில் விவசாயம் நடக்கவில்லை என்றும், ரோடு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அமைந்திருந்த கால்வாய், பல ஆண்டுகளுக்கு முன்பே கை விடப்பட்ட கால்வாய் என்றும், பொதுப்பணித்துறையிடம் தடையின்மைச் சான்று பெற்றே அங்கு ரோடு அமைக்கப்பட்டது என்றும் விளக்கினர். கால்வாய்க்கு மாற்று இடம் தரலாம் என்றும், திருத்திய வரைபடம் தயாரிக்க அவகாசம் இல்லை என்றும் குடியிருப்புவாசிகள் கூறியதைக் கேட்ட பன்சால், “”உங் களது வீடுகளை இடிக்க மாட்டோம்; தற்போது கொடுத்துள்ள “கெடு’வை வரும் 31 வரை நீட்டிக்கிறேன். அதற்குள் திருத்திய வரைபடத்தை முறைப்படி சமர்ப்பியுங்கள்,” என்றார். இதனால், “ஸ்ருதி என்கிளேவ்’ குடியிருப்பு வாசிகள் மகிழ்ச்சியுடன் திரும்பினர். சவுரிபாளையம் ஜி.ஆர்.ஜி., நகரில் பொது ஒதுக்கீட்டு இடத்தை போலி வரைபடம் தயாரித்து விற்பனை செய்த விவகாரம் பற்றி நேற்று மீண்டும் புகார் வந்தது. அது குறித்த விபரங்களைக் கேட்ட பன்சால், ஏற்கனவே உத்தரவிட்டபடி, சம்மந்தப்பட்ட இடத்தை “பூங்கா இடம்’ என்பதற்கு நிபந்தனையுடன் திட்ட அனுமதி வழங்குமாறு உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட்டார். அத்துடன், போலி வரைபடம் தயாரித்த நபர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய முறைப்படி புகார் கொடுக்கவும் அவர் அறிவுறுத்தினார். பி.என். புதூரில் லே-அவுட்டுக்கு அனுமதி பெற்று, தொகுப்பு வீடுகளைப் போல சுற்றுச்சுவர் கட்டியிருப்பதால், பின்னாலிருக்கும் மனையிடங்களுக்குச் செல்ல வழியில்லை என்று புகார் மனு தரப்பட்டது. அதற்கு, “”லே-அவுட்டுக்கு அனு மதி பெற்றால், அடுத்த பகுதிக்குச் செல்லும் வகையில் அணுகுசாலை இருக்க வேண்டியது அவசியம். சுற்றுச்சுவர் கட்ட அனுமதியில்லை. அந்த இடத்தை ஆய்வு செய்து, உடனடியாக அதை இடிக்க ஏற்பாடு செய்யுங்கள்,” என்று உறுப்பினர் செயலருக்கு பன்சால் உத்தரவிட்டார். மற்றொரு மனுவை விசாரித்த அவர், “”அரசு கையகப்படுத்திய நிலத் தில், லே-அவுட் அமைக்க அனுமதி தர மாட்டோம்,” என்றார். இவ்வாறு, மனுதாரர்கள் மற்றும் பொதுமக்கள் தந்த பல்வேறு புகார்களின் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க பன்சால் உத்தரவிட்டதால், முகாமுக்கு வந்த பெரும்பாலானவர்கள் திருப்தியுடன் திரும்பினர்.