தினமலர் 20.01.2011
அனுமதி பெறாத கட்டடத்தில் இயங்கிய தனியார் சைக்கிள் ஷோரூமிற்கு “சீல்’
அம்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அனுமதியின்றி வர்த்தக கட்டடங்கள், வணிக வளாகம், வீடுகள் கட்டப்படுவதாக, நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உழவர் சந்தை எதிரில் உள்ள தனியார் சைக்கிள் நிறுவனத்தின், சைக்கிள் விற்பனை ÷ஷாரூம் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டது தெரிந்தது.
அதன் உரிமையாளர்களிடத்தில் அனுமதி பெற்றும், உரிய வரி செலுத்தும்படி நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து, கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் மூன்று முறை கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனத்தினர் அதை பொருட்படுத்தாமல் இருந்தனர். இதையடுத்து, அம்பத்தூர் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், நகர அமைப்பு அலுவலர் மற்றும் நகர அமைப்பு ஆய்வாளர்கள் தலைமையில், நேற்று சைக்கிள் விற்பனை ஷோரூமிற்கு அதிரடியாக “சீல்’ வைக்கப்பட்டது.