தினமணி 04.02.2011
நிலத்தடி நீரை எடுத்து விற்க அனுமதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
திருப்பூரைச் சேர்ந்த கே. பூமணி, கே. பரமசிவம் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவற்றில் தண்ணீர் எடுத்து விற்க அரசு அதிகாரிகள் தடை விதிக்கின்றனர். அவர்களின் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கில் புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சிக் கழகம் தன்னையும் ஒருவராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு செய்தது. அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அந்த இருவர் தொடர்ந்த வழக்கில் அவர்களுக்குச் சாதகமாக உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சிக் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இவற்றை நீதிபதிகள் எலீபே தர்மராவ், டி. அரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் கூறியிருப்பது: இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2003-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன்னர், வேளாண்மைத் துறை, குறிப்பிட்ட விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், அந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர இன்னும் கூடுதல் காலம் தேவைப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அந்தச் சட்டம் இயற்றப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் அதைச் செயல்பாட்டுக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கான காரணங்கள் அரசுக்கு மட்டுமே தெரியும். மேலும், அந்தச் சட்டத்தை அறிவிப்பு செய்வது குறித்து இந்த உயர் நீதிமன்றம் கடந்த 28.7.09, 7.10.10 ஆகிய தேதிகளில் இரு உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. அப்போதும் நடவடிக்கைகள் இல்லை.
வணிக நோக்கில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, அதன் மூலம் லாபம் அடைவோரிடம் இருந்து நிலத்தடி நீரைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. ஏனெனில், விவசாயத்துக்கு தண்ணீர்த் தட்டுப்பாடும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. எனவே, நிலத்தடி நீர்ச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரும் வரையில், நிலத்தடி நீரை எடுத்து விற்க எந்தவொரு நபரையும் அரசு அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.