தினமலர் 28.06.2011
மாநகராட்சிக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் பைசல் செய்தது
மதுரை : மதுரை நெல்பேட்டையில் ஆடுவதை கூடம் செயல்படுவதை தடுக்க தவறியதாக கூறி தாக்கலான அவமதிப்பு வழக்கை, மாநகராட்சி கமிஷனர் தாக்கல் செய்த வாக்குமூலத்தை ஏற்று, ஐகோர்ட் கிளை பைசல் செய்தது. மதுரையை சேர்ந்த அப்துல்காதர் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு: நெல்பேட்டை காயிதே மில்லத் தெருவில் ஆடு வதை கூடம் செயல்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை மூடக் கோரி ஐகோர்ட் கிளையில் ரிட் மனுக்கள் தாக்கலாகின. இதை விசாரித்த ஐகோர்ட், கடந்த அக்., 18ல் நெல்பேட்டை ஆடு வதை கூடத்தை மூட உத்தரவிட்டது. மாநகராட்சி அதை மூடியது. சிறிது நாட்களில் அங்கு மீண்டும் ஆடுகள் வதை செய்யப்பட்டன. அதை தடுக்க மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி தவறினர். அவர்கள் மீது அவமதிப்பு பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. வழக்கு நீதிபதிகள் கே.சுகுணா, ஏ.ஆறுமுகச்சாமி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் பதில் மனுவை கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், மாநகராட்சி வக்கீல் எம்.ரவிசங்கர் தாக்கல் செய்தனர். மனுவில், “”நெல்பேட்டை ஆடு வதை கூடத்தை மூட ஐகோர்ட் காலக்கெடு நிர்ணயிக்கவில்லை. அந்த வதை கூடத்தை போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் ஜூன் 24ல் மூடிவிட்டனர். அனுப்பானடியில் புதிய ஆடு வதை கூடம் திறக்கப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவை மீறவில்லை,” என குறிப்பிடப்பட்டது. அதை ஏற்று மாநகராட்சி கமிஷனர் உட்பட மூவர் மீதான அவமதிப்பு வழக்கை பைசல் செய்த நீதிபதிகள், ஆடு வதை கூடத்தை மூடுவது குறித்த கோர்ட் உத்தரவை மாநகராட்சி கமிஷனர் செயல்படுத்தியுள்ளார். கோர்ட் உத்தரவு மீறப்படவில்லை, என்றனர்.