தினமணி 30.11.2011
மேட்டுப்பாளையம் நகராட்சியில் வடிகால் திட்டப் பணி துவக்கம்
மேட்டுப்பாளையம், நவ. 29: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகிலுள்ள கோவை – அன்னூர் சாலை சந்திப்பிலிருந்து, காந்திபுரம் முதல் வீதிவரை 250 மீட்டர் தூரத்துக்கு ரூ.9.50 லட்சம் மதிப்பில், மழைநீர் வடிகால் கட்டும் பணிக்கான துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2 வருடங்களுக்கு முன்னர், சாலையை விரிவுபடுத்துவதற்காக, நகர நெடுஞ்சாலைத் துறையினரால், கோவை சாலையின் இருபுறமும் உள்ள சாக்கடைகள் இடிக்கப்பட்டன. ஆனால், சாக்கடைகள் மீண்டும் கட்டப்படாததால், அப்பகுதி கோழி இறைச்சிக் கடையிலிருந்து வரும் கழிவு உள்ளிட்ட பிற கழிவும் சேர்ந்து, சாலையோரத்தில் சாக்கடை போல ஓடிக் கொண்டுள்ளது. சுகாதார சீர்கேட்டைத் தடுக்கும் வகையில் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வணிகர்கள், சாக்கடை அமைக்க வேண்டுமென நகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில், ரூ.9.50 லட்சம் மதிப்பில் 250 மீட்டர் தூரத்துக்கு மீண்டும் வடிகால் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.
பங்களாமேடு ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற திட்டப் பணி துவக்க விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் சதீஸ்குமார் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் ரமா செல்வி, நகராட்சி உதவிப் பொறியாளர் சண்முகவடிவு முன்னிலை வகித்தனர். சக்தி விநாயகர் கோயில் குருக்கள் நடத்திய பூமி பூஜைக்குப் பின், பணி தொடங்கி வைக்கப்பட்டது.
நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், மகேந்திரன், ஜெகநாதன், ராஜேஸ்வரி, நாகஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்னும் 2 மாதத்துக்குள் வடிகால் அமைக்கும் பணி முடிவடையுமென, நகராட்சி உதவிப் பொறியாளர் சண்முகவடிவு தெரிவித்தார்.