தினமலர் 12.12.2011
திருச்சி மாநகராட்சி புது மேயரின் புதிய திட்டம் :புகார்தாரருக்கு பதில் கடிதம் அனுப்பி அசத்தல்
திருச்சி: திருச்சி மாநகராட்சி மேயர் திங்கட்கிழமைதோறும் நடத்தும் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் புகார் குறித்த நடவடிக்கை விவரங்கள் மனுதாரருக்கு கடிதம் மூலம், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து வருவது வரவேற்கதக்க அணுகுமுறையாக உள்ளது. திருச்சி மாநகராட்சி மேயராக ஜெயா கடந்த ஒரு மாதத்துக்கு முன் பதவியேற்றார். அவர் பதவியேற்றதும் திங்கட்கிழமைதோறும் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்கள் வாங்கப்படும் என்று அறிவித்தார். கடந்த காலங்களிலேயே திங்கட்கிழமைகளில் பொதுமக்களிடம் மனுவாங்குவது அமலில் இருந்தாலும், முன்பு இருந்த மேயர் அதை சரிவர கடைபிடிக்கவில்லை. ஆனால் பதவியேற்றது முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்களிடம் மேயர் ஜெயா, துணைமேயர் ஆசிக்மீரா, மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து தவறாது பொதுமக்களிடம் மனு வாங்கி வருகிறார். மேயர் ஜெயா பதவியேற்ற பின் முதல் வாரம் திங்கட்கிழமை பொதுமக்களிடம் மனுவாங்கியபோது, எவ்வித முன்னேற்பாடும் இல்லை என்பதால், புகார் மனுவை பெற்றதுக்கான மனுரசீது கூட கொடுக்கப்படவில்லை. ஆனால் அதற்கு அடுத்த வாரங்களில் மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவ் ஏற்பாட்டின் பேரில், பொதுமக்களின் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, அதற்கான மனுரசீதும் வழங்கப்பட்டது. மனுவை பெறும்போதே புகார்தாரரின் பிரச்னைக்கு எவ்வளவு நாளில் தீர்வு காணப்படும் என்பதை மேயர் ஜெயா அதிகாரிகளை தெரிவிக்க சொல்கிறார். அவர்களும் குறிப்பிட்ட தேதிக்குள் பிரச்னை தீர்க்கப்படும் என்று கூறுகின்றனர். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக திங்கட்கிழமைதோறும் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை, சாக்கடை, குடிநீர், குப்பை அகற்றுதல், நீர்தேங்கி நிற்பது உள்ளிட்ட பிரச்னைகளை உள்ளடக்கியதாகும். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேயர் ஜெயாவும், மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்தனர். இதையடுத்து அதிகாரிகளும் அளிக்கப்பட்ட புகார் மனுக்களின் மீது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தீர்வு காணப்பட்ட பிரச்னை குறித்த, புகார்தாரருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது பதில் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை பொறுத்தவரை, இதுவரை அளிக்கப்பட்ட எந்த புகாருக்கும் தீர்வு காணப்பட்டது குறித்து பதில் கடிதம் அனுப்பியது இல்லை. தற்போது தான் முதல்முறையாக புகார்தாரருக்கு தீர்வு காணப்பட்டது குறித்து பதில் கடிதம் அனுப்பும் முறையை, தற்போது தான் மாநகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. இந்த முறைக்கு மாநகர மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் அனுப்பும் பதில் கடிதத்தை பார்த்து, மகிழ்ச்சியில் புகார்தாரர்கள் நன்றி தெரிவித்து மேயருக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் பதில் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். திருச்சி மாநகராட்சியின் புதிய பதில் கடித அணுகுமுறை தொடர்ந்தால், மாநகர மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும். பதில் கடிதம் அனுப்பும் முறையில் காட்டும் அக்கறையை, பிரச்னைகள் குறித்த புகார் மீதும் அதிகாரிகள் காட்ட வேண்டும். மனுக்கள் எவ்வளவு?: இதுகுறித்து மேயர் ஜெயாவிடம் கேட்டபோது, “”இதுவரை நடந்த குறைதீர் கூட்டம் மூலம் 103 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றில் 85 சதவீதம் மனுக்கள் மீதான பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளது. மீதியுள்ள மனுக்கள் மீதான பிரச்னையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது குறித்து புகார்தாரருக்கு பதில் கடிதம் அனுப்பி வருகிறோம். இந்த முறைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்,” என்று கூறினார்.