தினமலர் 25.07.2012
மஞ்சூரில் ரூ.5 லட்சத்தில் தண்ணீர் தொட்டி குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை
மஞ்சூர் : மஞ்சூர் ஹட்டியில் 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தண்ணீர் தொட்டி கட்டும் வகையில், அடிக்கல் நாட்டு விழா நடந்தது.கீழ்குந்தா பேரூராட்சிக்கு 6வது வார்டுக்கு உட்பட்ட மஞ்சூர் ஹட்டியில் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராமத்திற்கு சரிவர தண்ணீர் வினியோகம் இல்லாததால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் பல முறை சென்று புகார் தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்தனர். “புதியதாக தண்ணீர் தொட்டி கட்டி தடையின்றி தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என 6வது வார்டு கவுன்சிலர் அர்ஜூணன் வலியுறுத்தினார்.இந்நிலையில், பேரூராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் மஞ்சூர் ஹட்டியில் தண்ணீர் தொட்டி கட்ட எம்.எல்.ஏ., நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மஞ்சூர் ஹட்டியில் நடந்தது. ஊட்டி எம்.எல்.ஏ., புத்திசந்திரன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். பேரூராட்சி தலைவர் ஜெயா, செயல் அலுவலர் மணிகண்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.