தினமலர் 26.07.2012
பாதாள சாக்கடை திட்டம் இழுபறி நீடிக்கிறது!
சிவகங்கை:சிவகங்கை பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டிற்கு வராத நிலையில் டெபாசிட் தொகையாவது திரும்ப கிடைக்குமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகங்கை நகராட்சியில் கழிவுநீரை வெளியேற்றுவதற்காக பாதாளச் சாக்கடை திட்டம் 2007ல் துவங்கியது.இதற்கான பணி குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.நகர்புற வளர்ச்சி திட்டம் மூலம் 5.19 கோடி,அரசு மானியமாக ரூ.12.41 கோடி, நகராட்சி பங்கீடு ரூ.5.80 கோடி உட்பட ரூ.23.40 கோடி இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. நகராட்சி பங்கீட்டு தொகை ரூ.5.80 கோடியை திரட்டுவதற்காக நகராட்சி பகுதியில் வசிக்கும் வீட்டின் உரிமையாளர்களிடம் சதுர அடிக்கேற்ப டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டது.பாதாள சாக்கடை திட்ட பணிகள் இரு கான்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திட்ட ஒப்பந்தப்படி கடந்த 2009ம் ஆண்டே பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும்.மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் இன்னும் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் இழுபறியாக உள்ளது.வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தேவையான 400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னையால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகம்,நகராட்சி திணறுகிறது.
குழாய் இணைப்பு: பெரும்பாலான தெருக்களில் சாக்கடை நீர் செல்ல குழாய்கள் பதிக்கும் பணி மட்டும் முடிந்துள்ளது.இதனால் வீட்டிலுள்ள கழிவு நீரை தாங்களாகவே பாதாள சாக்கடை குழாயில் இணைத்து விட்டதால் கழிவு நீர் வெளியேற வழியின்றி, இந்திரா நகர் உள்பட பல இடங்களில் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகர் பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவு நீ ரால்”டெங்கு’ பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது.குடிநீர் வடிகால் வாரிய இன்ஜினியர் சந்திரவேல்ஜி கூறுகையில், “திட்டம் துவங்கிய போது, வாணியங்குடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை, தற்போது சொந்தம் கொண்டாடி ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதனால் கொட்டகுடி, அரசாணிபட்டி பகுதியில் 100 ஏக்கரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரு மாதத்திற்குள் இத்திட்டம் இறுதி வடிவம் பெற்று,செயல்பாட்டுக்கு வரும் என நம்புகிறோம்,’ என்றார்.
கலெக்டர் ராஜாராமன் கூறுகையில், “பாதாள சாக்கடை திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.சுத்திகரிப்பு நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இத் திட்டத்தை மக்களின் பயன்பாட்டுக்கு எப்படியாவது கொண்டு வருவோம்,’ என்றார்.நகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன் கூறும்போது, “பாதாள சாக்கடை பணியை முடித்து,செயலுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுகிறோம். திட்டம் முழுமை பெறுவதற்குள் வீட்டு கழிவுகளை பாதாள சாக்கடை குழாயில் இணைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’, என்றார். திட்டத்தை செயல்படுத்துவதாக கூறி மக்களிடம் ரூ.5 ஆயிரம் வரை டெபாசிட்டாக வசூலிக்கப்பட்டது. திட்டம் செயல்பாட்டிற்கு வருமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்து விட்ட நிலையில் தங்களது டெபாசிட் தொகையையாவது நகராட்சி திரும்ப தருமா என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.