தினமலர் 27.07.2012
மழைநீர் சேகரிப்புக்கு ரூ.30 லட்சம் கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்
குளித்தலை: “கரூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகளுக்காக நடப்பாண்டில் 30 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது’ என மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா தெரிவித்தார்.கரூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷாபனா பேசுகையில், ” கரூர் மாவட்டத்தில் நெல் 160 டன், நிலக்கடலை 70 டன், பயிர்வகை 23 டன், சோளம் நான்கு டன் விதைகள் இருப்பில் உள்ளது. யூரியா 777 டன்னும், டி.ஏ.பி., உரங்கள் 486 டன்னும், பொட்டாஷ் உரங்கள் 888 டன்னும், காம்பளக்ஸ் உரம் 2,345 டன்னும் இருப்பில் உள்ளது. சம்பா பருவத்திற்கு 160 டன் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. நடப்பாண்டில் 16 ஆயிரத்து 496 ஹெக்டேரில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.வேளாண்மை துறை மூலம் 2012-13 ம் ஆண்டில் ஆறு கசிவு நீர் குட்டை அமைக்கும் பணிக்காக 34.10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பணிக்காக 40 ஹெக்டேருக்கு 14.12 லட்ச ரூபாயும், ஆறு மழைநீர் சேகரிப்பு பணிகளுக்கு 30 லட்ச ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். எம்.எல்.ஏ., பாப்பாசுந்தரம், ஆர்.டி.ஓ., சிவசௌந்திர வள்ளி, வேளாண்மை இணை இயக்குநர் சௌந்திரம், உதவி இயக்குநர் துரைசாமி, கூட்டுறவு இணைப்பதிவாளர் உமா மகேஸ் வரி உள்பட பலர் பங்கேற்றனர். குறைதீர் கூட்டத்தில் ஏழு விவசாயி களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.