தினமலர் 27.07.2012
உணவை பிளாஸ்டிக் பையில் வைத்து சாப்பிட்டால் ஆபத்து
கரூர்: “சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து சாப்பிட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும்’ என கரூர் மாசு கட்டு பாடு வாரிய உதவி பொறியாளர் சதீஸ்குமார் தெரிவித்தார்.
கரூர் நகராட்சி அலுவலகத்தில் குறைந்தளவுள்ள மைக்ரான் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மாசுகட்டுபாடு வாரிய பொறியாளர் சதீஸ் குமார் கூறுகையில், ” 40 மைக்ரான் அளவுள்ள பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்து விட்டு, கீழே போடுவதால் அவை அழிய 500 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதனால் மண்ணும், தண்ணீரும் கெட்டு போய்விடும்.
சூடான பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்களை வைத்து சாப்பிடுவதால், அதில் உள்ள டயாக்சீன் மூலம் புற்றுநோய் ஏற்படும்.அசைவ வகைகளை பிளாஸ்டிக் பைகளில் ரத்தத்துடன் வாங்கி சென்று சமைத்து சாப்பிடும் போது, உடலுக்குள் பிளாஸ்டிக் சென்று விடும். எனவே, பிளாஸ்டிக் பொருட்களை உணவு பொருட்களோடு சேர்த்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், சூடான உணவு வகைகளை பிளாஸ்டிக் பையில் வைத்து சாப்பிட கூடாது. சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தைக்கும் பெரியளவில் பாதிப்பு ஏற்படும்’ என்றார்.
கராட்சி தலைவர் செல்வராஜ், கமிஷனர் ரவிச்சந்திரன், மாசுகட்டுபாடு வாரிய உதவி பொறியாளர் சம்பத்குமார், வர்த்தக கழக தலைவர் ராஜூ, பாசன வாய்க்கால் சங்க தலைவர் ராஜாமணி பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.