தினமலர் 28.07.2012
ஜெகதளாவில் ரூ.35 லட்சம் செலவில் அடிப்படை பணிகள்
குன்னூர்:ஜெகதளா பேரூராட்சியில் தடுப்பு சுவர் மற்றும் கழிப்பிடம் அமைக்க 35 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெகதளா பேரூராட்சியில் சுவர்ண ஜெயந்தி ரோஸ்கார் யோஜனா திட்டத்தின் கீழ், மகளிருக்கு சேலையில் பல்வேறு வேலைபாடுகள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 23 பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கான பயிற்சி முடிந்தது. பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது.
ஜெகதளா பேரூராட்சி தலைவர் உஷா மற்றும் செயல் அலுவலர் ராஜகோபால் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் உதவித்தொகையை வழங்கினர்.தலைவர் உஷா கூறுகையில், “”சுவர்ண ஜெயந்தி ரோஸ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் அழகுக்கலை, டெய்லரிங் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க பரிசீலிக்கப்படும். ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட என்.ஜி., காலனி பகுதியில் வெள்ள நீர் புகுந்து விடுவதால், அங்கு தடுப்பு சுவர் கட்ட கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டது. இங்கு 25 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு சுவர் கட்டப்படும். கட்டுமான பணிகள் விரைவில் துவக்கப்படும்.அருவங்காடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அங்கு கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர். எனவே மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இப்பகுதியில் 10 லட்சம் ரூபாய் செலவில் கழிப்பிடம் கட்டும் பணி துவங்கியுள்ளது,” என்றார்.