தினமலர் 30.07.2012
குன்னூர் பேக்கரியில் பிளாஸ்டிக் பைகள் : ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்த ஆர்.டி.ஓ.,
குன்னூர் : குன்னூர் பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரியில் தடை செய்யப்பட்ட “பிளாஸ்டிக்’ பைகள் பயன்படுத்தப்பட்டதால், 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரியில் 20 மைக்ரானுக்கு குறைவான எடையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடை கடந்த 12 ஆண்டுகளாக அமலில் உள்ள போதும், மாவட்டத்தில் பிளாஸ்டிக் புழக்கம் இருந்து வருகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கும் அவ்வப்போது, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், “குன்னூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தின்பண்டங்கள் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களில் பேக் செய்து தரப்படுகிறது,’ என அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து, இந்த பேக்கரியில் ஆர்.டி.ஓ., காந்திமதி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் அங்கு ஏராளமான பிளாஸ்டிக் கவர்கள், பைகள் பயன்பாடுக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. கடை உரிமையாளருக்கு 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இதே பேக்கரிக்கு ஏற்கனவே, இதே காரணத்துக்காக,13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.””மீண்டும் இங்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தால், பேக்கரிக்கு சீல் வைக்கப்படும்,” என ஆர்.டி.ஓ., காந்திமதி எச்சரித்தார்.