தினமலர் 01.08.2012
சென்னை பெருநகர பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்வது தொடர்பாக, டில்லி, மும்பை நகரங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
சென்னை மாநகராட்சி மற்றும் அதை ஒட்டியுள்ள உள்ளாட்சி பகுதிகளை ஒருங்கிணைத்து, 1974ம் ஆண்டு சென்னை பெருநகர பகுதியாக அறிவிக்கப் பட்டது. இதற்கு உட்பட்ட பகுதிகள், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின், நில பயன்பாட்டு விதிகளை கடைபிடிக்க @வண்டும்.
டில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற பெரு நகரங்களைவிட, சென்னை பெருநகர பகுதியின் பரப்பளவு மிகவும் குறைவு. சென்னை பெருநகர எல்லைக்கு வெளியே ஸ்ரீபெரும்புதூர், மறைமலை நகர், கேளம்பாக்கம், திருவள்ளூர் உள்ளிட்ட சிறுநகரங்களும், இவற்றின் சுற்றுப்புறப் பகுதிகளிலும் திட்டமின்றி, தாறுமாறான வளர்ச்சி அதிகரித்து வருகிறது.
வளர்ச்சியை, நெறிப்படுத்த இப்பகுதிகளை சி.எம்.டி.ஏ., எல்லைக்குள் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என, அரசுக்கு பரிந்துரைகள் வந்தன. இதை கருத்தில் கொண்டு, டில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் உள்ளது போன்று, சென்னையிலும் பெருநகர் பகுதி எல்லையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
பரிந்துரைகள் என்ன?இதற்காக, சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரிகளை கொண்ட குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின் குழு, முதற்கட்ட அறிக்கையை
அரசுக்கு அளித்து உள்ளது.அதில், இரண்டு முக்கிய பரிந்துரைகள் கூறப்பட்டு உள்ளன.
தற்போது, 1,189 சதுர கி.மீ., ஆக உள்ள பரப்பளவை, இரண்டு வகையில் அதிகரிப்பது பற்றி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஒரு பரிந்துரையில், 4,400 சதுர கி.மீ., ஆக அதிகரிக்கலாம் என்றும், மற்றொன்றில், 8,800 சதுர கி.மீ., ஆக விரிவாக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. இந்த பரிந்துரை அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது.அதிகாரிகள் ஆலோசனை இந்நிலையில், பரிந்துரைகளை அமலாக்கும்போது, எழும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப் பட்டு உள்ளது.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்தகைய விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் டில்லி, மும்பை, பெங்களூரு பெருநகர் வளர்ச்சி மண்டல அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதற்காக, அந்தந்த மாநிலஅதிகாரிகளுக்கு சி.எம்.டி.ஏ., அழைப்பு விடுத்தது. இதற்கு, அதிகாரிகளும், சென்னை வர சம்மதித்து உள்ளனர்.வெளி மாநில அதிகாரிகள் மட்டுமல்லாது, விரிவாக்கத்தின் போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்க, நகராட்சி மற்றும் உள்ளாட்சி, வருவாய்த் துறை, குடிநீர் வாரிய அதிகாரிகள் என, தமிழகத்தில் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இந்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரல்கள் குறித்த வரைவு அறிக்கைஅரசின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டு உள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன், கூட்டம் நடத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி
கூறினார்.
பரிந்துரைகள் விவரம்
சென்னை பெருநகர எல்லை விரிவாக்கத்துக்காக, சி.எம்.டி.ஏ.,அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் விவரம்:
டூ பரிந்துரை 1: வடக்கில் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை; மேற்கில் ஸ்ரீபெரும்புதூர்; தெற்கில் செங்கல்பட்டு ஆகிய பகுதிகள் வரை சி.எம்.டி.ஏ., எல்லைகளை விரிவாக்கம் செய்யலாம். இதன் மூலம், சென்னை பெருநகர் பகுதியின் பரப்பளவு, 4,400 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கலாம்.
டூ பரிந்துரை 2: வடக்கில் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, மேற்கில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், தெற்கில் செய்யார் வரை சி.எம்.டி.ஏ.,எல்லைகளை விரிவாக்கம் செய்யலாம். இதனால், சென்னை பெருநகர் பகுதியின் பரப்பளவு, 8,800 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கும்.
– நமது நிருபர் –