தினமணி 08.08.2012
காயல்பட்டினம் குடிநீர் பிரச்னை: நிலத்தடி நீர் மூலம் தீர்க்க அதிகாரிகள் ஆய்வு
ஆறுமுகனேரி,
ஆக. 7: காயல்பட்டினத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு,
நிலத்தடி நீர் மூலம் தீர்வு காண நகராட்சி
அதிகாரிகள் திங்கள்கிழமை குரும்பூர் அருகே உள்ள நல்லூரில் ஆய்வு மேற்கொண்டனர்.
காயல்பட்டினத்துக்கு குடிநீர் வழங்கும் மேல
ஆத்தூரில் உள்ள நீர்தேக்கம் உள்பட தூத்துக்குடி போன்ற பல்வேறு
நீர் தேக்கங்களுக்கு பாபநாசம் அணையிலிருந்து இருந்து தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து
விடப்படுகிறது. தினசரி சராசரியாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் காயல்பட்டினத்துக்கு எடுக்கப்பட்டு
வந்தது.அது தற்போது 15
லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது என மேலாத்தூர் குடிநீர் வடிகால் வாரிய
துணை பொறியாளர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தண்ணீர்
வரத்து மிகவும் குறைவாக இருப்பதால்,
சில நாள்களில் இந்த அளவும் குறைக்கப்படவேண்டி இருக்கும்
என்றும், திருநெல்வேலியில் அமைச்சர் கலந்துகொண்ட
ஆய்வுக் கூட்டத்தில் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, விரைவாக நிலத்தடி நீர் மூலம் காயல்பட்டினத்துக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நிலத்தடி நீர் மூலம் காயல்பட்டினத்துக்கு குடிநீர் வழங்க குரும்பூர்
அருகே உள்ள நல்லூரில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.நகர்மன்றத் தலைவர்
ஐ. ஆபிதாஷேக், ஆணையர் அசோக்குமார், மண்டல பொறியாளர் மற்றும் இதர அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.