வெண்துளி நன்னீர் திட்டத்தில் மழைநீர் சேகரிப்பு மையம், பூங்கா, நடைப் பயிற்சி பாதை : ராபின்சன் குளத்தைப் புனரமைக்கும் பணி தொடக்கம்
இக் குளத்தை தூரெடுத்து, மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்கவும், அதைச் சுற்றி பூங்கா மற்றும் நடைப் பயிற்சி பாதை அமைக்கவும் நகராட்சி நிர்வாகமும், ரோட்டரி சங்கமும் இணைந்து இப்பணியை மேற்கொள்ள முடிவு செய்தன.
இத் திட்டத்துக்கு வெண்துளி நன்னீர் திட்டம் என பெயரிடப்பட்டது. ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், அம்பாலால் அறக்கட்டளைச் செயலருமான கே.ஜவரிலால் ஜெயின் இத் திட்டத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, குளம் தூரெடுக்கும் பணிக்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் என்.எஸ். குமரகுரு தலைமை வகித்தார். பொருளாளர் டி.ராஜேந்திரன் வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியர் ஆஜய் யாதவ் பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் கே.சி.வீரமணி, கு.லிங்கமுத்து, நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.கே.என். பழனி, நகராட்சி ஆணையர் ஜி. உமாமகேஸ்வரி, அரசு வழக்குரைஞர் கே.எம்.பூபதி, புலவர் வே.பதுமனார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிதி குவிந்தது..!
இப் பணிக்காக நகராட்சி நிர்வாகம் தன் பங்களிப்பாக ரூ. 10 லட்சம் வழங்கியது. எம்எல்ஏ கு.லிங்கமுத்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கினார். திட்டத் தலைவர் ஜவரிலால் ஜெயின் முதல் கட்டமாக ரூ. 2 லட்சம் வழங்கினார். அதைத் தொடர்ந்து ரோட்டரி தலைவர் என்.எஸ். குமரகுரு, ரோட்டரி ஆளுநர் ராஜா சீனிவாசன், உறுப்பினர் சத்தியநாராயணன், அரிசி வியாபாரிகள் சங்கச் செயலர் டி.ராஜேந்திரன் ஆகியோர் தலா ரூ. 1 லட்சம் வழங்கினர். நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து ரூ. 1 லட்சம் வழங்குவதாக அறிவித்தனர்.
மேலும் அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, ரோட்டரி நிர்வாகிகள் எம்.ஜி. கணேசன், அண்ணாமலை, நகர்மன்ற உறுப்பினர் பூங்கோதை முனியப்பன் தலா ரூ. 25 ஆயிரம் வழங்கினர்.
“உழவர் சந்தைக்கு பாதிப்பு கூடாது’
வேலூர், ஆக. 17: உழவர் சந்தைக்கு பாதிப்பில்லாமல் குடியாத்தம் ராபின்சன் குளத்தை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது குடியாத்தம் பகுதியில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:
குடியாத்தம் ராபின்சன் குளத்தின் கிழக்குப் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து காய்கறிகள், கீரை, பழங்களை இங்கு கொண்டுவந்து விற்பனை செய்கிறோம். தினமும் 5,000 நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. உழவர் சந்தை கட்டடத்துக்கு பாதிப்பில்லாமல் இப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.