தினமலர் 27.08.2012
மாநகராட்சி பள்ளியில் கணித ஆய்வுக்கூடம்
சென்னை : சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கென நவீன கணித ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது.பெரம்பூர், பள்ளிச் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3,400க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர்.
மாநகராட்சி பள்ளிகளில் அறிவியல் பாடத்திற்கென, செய்முறை விளக்கங்கள் கற்றுக் கொள்ள, ஆய்வுக்கூடம் உள்ளது. இதனால் மாணவியர் அறிவியல் பாட செய்முறைகளை ஆய்வு செய்ய முடிகிறது.இந்த யுக்தியை, கணித பாடத்திலும் புகுத்தினால், மாணவியர் கணித உபகரணங்களின் பயன்பாடுகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்ற நோக்கில் கணித செய்முறைக் கூடம் அமைக்கப்படவுள்ளது.இந்த ஆய்வுக்கூடம் ஆறு முதல், பிளஸ் 2 வரை உள்ள மாணவியர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்படும்.இதுகுறித்து, அப்பள்ளி தலைமையாசிரியர் கூறும் போது, “”கணித ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகள் முடிந்தவுடன் உபகரணங்கள் வைக்கப்படும்.விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
கணித உபகரணங்கள் மூலம் செய்முறை விளக்கங்கள் கொடுத்தால், கணித பாடத்தையும் மாணவியர் எளிதில் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்,” என்றார்.