தினமணி 09.09.2009
பில்லூர் 2-வது குடிநீர் திட்டப் பணிகள் ஓராண்டில் நிறைவேறும்: மேயர் நம்பிக்கை
கோவை, செப். 8: பில்லூர் 2-வது கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணிகள் இன்னும் ஓராண்டில் நிறைவேறும் என்று கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம் கூறினார்.
கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டப் பணிகளை மேயர் தலைமையில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப்பின் மேயர் வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசின் கனவுத் திட்டமான ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி கோவை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இதில் பில்லூர் 2-வது குடிநீர்த் திட்டம் ரூ.113.74 கோடியிலும், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் ரூ.96.51 கோடியிலும், நகர்புற ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் ரூ.377.13 கோடியிலும் நடைபெற்று வருகிறது.
இதுதவிர 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம், மழைநீர் வடிகால் கட்டுதல் திட்டம், நீர்நிலைகளை பாதுகாத்து மழைநீர் சேகரிப்பு செய்தல் திட்டம், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் ஆகியவை ரூ.1,889 கோடியில் நிறைவேற்ற திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பில்லூர் 2-வது குடிநீர்த் திட்டத்துக்காக 35 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்படுகின்றன.
ஏற்கெனவே பில்லூர் 1-வது குடிநீர்த் திட்டத்தில் எந்த இடத்தில் அடிக்கடி உடைப்புகள் ஏற்பட்டன கண்டறியப்பட்டுள்ளது.
அதே இடங்களில் இப்போது இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் இப்பணிகள் முடிந்துவிடும்.
பில்லூர் 2-வது குடிநீர்த் திட்டத்தில் இருந்து 12.5 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இதனால், மாநகராட்சியில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.
மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக், ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்ட கண்காணிப்புப் பொறியாளர் பூபதி, செயற்பொறியாளர்கள் லட்சுமணன், திருமால்வளவன் உள்பட பலர் பங்கேற்றனர்.