திருத்தணி, செப். 5: நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு 12 ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால் 6 கடைகளுக்கு, ஆணையர் கே. பாலசுப்பிரமணியம் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை சீல் வைத்தார்.
÷திருத்தணி பஸ் நிலையம் அருகே உள்ள சன்னதி தெருவில் உள்ள 7 கடைகள் நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமானவை.
÷இந்த கடைகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது. ஏலக்கெடு முடிந்தவுடன் புதிதாக ஏலம் அல்லது புதுப்பிக்கப்படும்.
÷இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக தீனதயாளன், வெங்கடேசன் முருகேச ரெட்டி, ஜான்மாவீர் சந்திரன் மற்றும் மணி ஆகிய 6 கடைக்காரர்கள் நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர். இதையெடுத்து நகராட்சி நிர்வாகம் வாடகை பாக்கியை செலுத்துமாறு 4 முறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
÷கடந்த ஒரு வாரத்துக்கு முன் சட்டப்பூர்வமாக இறுதி நோட்டீஸ் அனுப்பியும் நிலுவைத்தொகை செலுத்தாததால் புதன்கிழமை பிற்பகல் நகராட்சி ஆணையர் கே. பாலசுப்பிரமணியம், நகராட்சிப் பொறியாளர் எஸ். சண்முகம், சுகாதார ஆய்வாளர் இ. லஷ்மிநாராயணன், பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் ஜெ. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீஸôருடன் சென்று வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
÷இது குறித்து நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் கூறும்போது: சீல் வைக்கப்பட்டுள்ள 6 கடைகளுக்கான வாடகை ரூ.5 லட்சம் நிலுவையில் உள்ளது. பலமுறை நிலுவைத்தொகை செலுத்த அறிவுறுத்தியும் காலம் தாழ்த்தியதால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
÷இந்த 6 கடைகளுக்கும் நகரமன்ற உறுப்பினர்கள் அனுமதியுடன் 45 நாள்களுக்குள் மறு ஏலம் விடப்படும்.
÷இந்த ஆண்டு மட்டும் ரூ.60 லட்சம் வரி நகராட்சிக்கு வரவேண்டியுள்ளது. பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிபாக்கிகளை உரிய நேரத்தில் செலுத்தினால்தான் நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடியும் என்றார் அவர்.