விதிகளை மீறிய கட்டடங்களுக்கு “சீல்’: மாநகராட்சி ஆணையர்
திருச்சி மாநகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் பொறியாளர்கள், நகரமைப்பு திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம் வரைபவர்கள் ஆகியோருடன் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார்.
2007-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களை நகர்ப்புற ஊரமைப்புத் திட்ட விதிகளின்படி ஆய்வு செய்து உரிய வளர்ச்சிக் கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு வரன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுமதி பெறாமலும், வாகன நிறுத்துமிட வசதி இல்லாமலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆணையர். இந்தக் கூட்டத்தில், நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, நகர ஊரமைப்புத் திட்ட உதவி இயக்குநர் முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.