தின மணி 23.02.2013
கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் ரூ.1700 கோடி செலவில் சோடியம் தொழில்நுட்பத்தில் மின்உற்பத்தி திட்டப்பணி நடைபெற்று வருவதாக கல்பாக்கம் அணு மின்நிலைய அணு விஞ்ஞானி பிரபாத்குமார் தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறை சார்பில் தாவர எரிபொருளும், அதன் செயல்பாடுகளும் என்ற தலைப்பிலான இருநாள் கருத்தரங்கு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கல்பாக்கம் அணு மின்நிலைய விஞ்ஞானி பிரபாத்குமார் பங்கேற்றுப் பேசுகையில், இந்தியா இயற்கை வளங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்தியாவின் ஆற்றல், தேவைகளை தமிழ்நாடு பல்வேறு வகையில் பூர்த்தி செய்கிறது. இன்றைய தேவைகளுக்கு அணுசக்தி மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனைப் பூர்த்தி செய்ய அணுசக்தித் தொழில்நுட்பங்கள், அதன் மூலப்பொருள்கள் மிகவும் பயன்படுகிறது என்றார்.
துணைவேந்தர் எம்.ராமநாதன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் அணுசக்தி போன்ற மாற்று எரிசக்தி தேவை முக்கியத்துவம் பெறுவதாகத் தெரிவித்தார்.
பொறியியல் புல முதல்வர் எஸ்.வேலுசாமி, இயந்திரப் பொறியியல் துறைத்தலைவர் என்.கிருஷ்ணமோகன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். ஒருங்கிணைப்பாளர் ச.சிவப்பிரகாசம் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் வி.மணிஇனியன் அறிமுகவுரையாற்றினார். துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.செந்தில்குமார் நன்றி கூறினார்.
பின்னர் விஞ்ஞானி பிரபாத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் ரூ.1700 கோடி செலவில் சோடியம் தொழில்நுட்பத்தில் மின்உற்பத்தி திட்டப்பணி நடைபெற்று வருகிறது.
இதில் 90 சதவீத பணி முடிவுற்றுள்ளது. விரைவில் அணு உலையானது முழுத்திறனுடன் இயக்கப்படும் போது சோடியம் தொழில்நுட்பப் பயன்பாடு வெற்றி அளிக்கும் என்றார்.