தின மணி 23.02.2013
வசந்த நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆர்.நந்தகோபால் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டதில், ஒரு வீட்டில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டதுடன், குடிநீர் இணைப்பையும் துண்டித்து ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார்.
வசந்த நகர் பகுதியில் வீடுகளில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு நடைபெறுவதாக ஆணையர் ஆர்.நந்தகோபாலுக்குப் புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அப்பகுதிகளிலுள்ள சந்தேகத்திற்கு இடமான வீடுகளில் ஆணையர் தலைமையில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வசந்த நகர் 3 ஆவது தெருவில் ஒரு வீட்டில் 30 அடி ஆழத்திற்கு உறைகிணறு அமைத்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் சேகரித்து வைத்து பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. அந்த வீட்டில் குடிநீர் திருட்டு நடந்த விதத்தை நேரில் ஆய்வு செய்த ஆணையர் குடிநீர் திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்மோட்டாரை பறிமுதல் செய்தார். வீட்டிற்கான குடிநீர் இணைப்பை துண்டிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, ஆணையருடன் தெற்கு மண்டல உதவி ஆணையர் அ.தேவதாஸ், பொறியாளர் சேகர், தொழில்நுட்ப உதவியாளர்கள் சேவியர், சுபா உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.
பின்னர் ஆணையர் ஆர்.நந்தகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு பெற்றிருப்பவர்கள், மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவது சட்டப்படி குற்றம். குடிநீர் குழாய்களில் சட்டத்திற்கு புறம்பாக மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்களின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், காவல் துறையினர் மூலம் கிரிமினல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
ஆய்வின்போது, மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொறியாளர்கள் தங்களது வார்டு பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சாத வகையில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு குறித்து எனது (ஆணையர்) அலுவலக தொலைபேசி எண்: 0452- 2531116-ல் புகார் தெரிவிக்கலாம், எனத் தெரிவித்தார்.