தெரு விளக்குகள் பராமரிப்பிற்கு “மொபைல் ஏணி’ அறிமுகம்
கம்பம்: கம்பம் நகராட்சியில், தெரு விளக்குகள் பராமரிப்பிற்கென “மொபைல் ஏணி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பணியாளர்கள் எளிதாக மின்கம்பங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். கம்பம் நகராட்சியில் சோடியம் வேபர், சி.எப்.எல்., ஹைமாஸ் விளக்குகள் என தெருவிளக்குகள் 2 ஆயிரத்தை தொட்டுள்ளது. தெருவிளக்குகள் பராமரிப்பில் சுணக்கம் இல்லாத நிலை காணப்படுகிறது. மிக குறைவான பணியாளர்கள் உள்ள இந்த பிரிவில், பணியாளர் பற்றாக்குறை பெரிய பிரச்னையாகும். ஒரு நாளைக்கு குறைந்தது 20 விளக்குகள் பராமரிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. குறைந்த பணியாளர்களை வைத்துக் கொண்டு பராமரிப்பு செய்வது நகராட்சிக்கு தலைவலியாக இருந்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மின்கம்பங்களில் ஏறாமல், ஹைட்ராலிக் ஏணி மூலம் பராமரிப்பு செய்ய, நவீன வாகனத்துடன் கூடிய ஏணி வாங்கப்பட்டுள்ளது. “மொபைல் ஏணி’ இணைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தின் விலை ரூ. 8 லட்சம். இனி மின்பராமரிப்பு பணியாளர்கள், மின்கம்பம் அருகில் சென்று, வாகனத்தில் உள்ள ஏணியில் ஏறி நின்றால் போதும். ஏணி ஹைட்ராலிக் விசை மூலம், மின்கம்பத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும். பராமிப்பு பணிகளை முடித்தபின், தானாகவே கீழே கொண்டு வந்து விடும். இதனால், விபத்துக்களை முழுமையாக தடுக்கப்படும். இந்த ஏணியுடன் கூடிய வாகனம், மாநகராட்சிகளிலும், பெரிய நகரங்களிலும் மட்டுமே உள்ளது.