மாநகராட்சி கடைகளுக்கு 15 சதவீத வாடகை உயர்வு
கோவை மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள மூன்றாண்டு நிறைவடைந்த கடைகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்வு செய்யவும், குத்தகைக்கு விடப்பட்டு ஒன்பதாண்டு முடிவடைந்த கடைகளுக்கு புதிதாக வாடகை நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்கு வாடகை மற்றும் குத்தகை இனங்கள் மூலம் ஆண்டுக்கு 16.70 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மாநகராட்சி வருவாய் இனத்தில் குத்தகை இனங்கள் மூலம் கணிசமான வருவாய் கிடைப்பதால், மாநகராட்சியில் வர்த்த பயன்பாட்டிலுள்ள ரிசர்வ் சைட்களில்<, வணிக வளாகம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் முயற்சி நடக்கிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் உத்தரவுப்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகளை பொது ஏலம் விடுவதை தவிர்த்து, குத்தகையை நீட்டித்தல் நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.கோவை மாநகராட்சியில் கடந்த 2004ல், இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாடகை வசூலிக்கப்படுகிறது. கடைகளின் உரிமக்காலம் நிறைவடையும் போது, 15 சதவீதம் <உயர்வு செய்து மாத வாடகை நிர்ணயம் செய்யவும், ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்த கடைகளுக்கு பொதுப்பணித்துறை மூலம் வாடகை மதிப்பீடு அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்த கடைகளுக்கு, சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை உயர்வு செய்யப்பட்டுள்ளது. மற்ற கடைகளுக்கு 15 சதவீதம் உயர்வு செய்யப்பட்டுள்ளது.பட்டேல் ரோடு வணிக வளாகத்தில் 30 கடைகள், சத்தி ரோடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் 32 கடைகள், ராஜி நாயுடு ரோடு வணிக வளாகத்தில் 19 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் வாடகை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. காந்திபுரம் அண்ணா வணிக வளாக கடைகளுக்கு சதுர அடிக்கு 75 ரூபாய் என வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வாடகை உயர்வுடன் சேவை வரி 12.36 சதவீதம் செலுத்த ஒப்புக்கொள்ளும் உரிமதாரர்களுக்கு கடைகளை ஒப்படைக்கவும், புதிய வாடகையை ஏற்றுக்கொள்ளாத உரிமதாரர்களின் உரிமத்தை ரத்து செய்து, கடையை மறுஏலம் கொண்டு வரவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதேபோன்று மாநகராட்சியில் உள்ள அதனைத்து வணிக வளாக கடைகளின் பட்டியலையும் அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “”நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2000, டிச., 30ம் தேதி, குத்தகை இனங்களுக்கு வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டது. அதன்படி, ஒன்பது ஆண்டுக்கு ஒரு முறை சந்தை மதிப்புக்கு ஏற்ப, வாடகை மறுநிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 2007, ஜூலை 3ல் வெளியான அரசாணைப்படி, மூன்றாண்டுக்கு ஒருமுறை நடப்பு வாடகையில் 15 சதவீதம் உயர்வு செய்யப்படுகிறது. இரு அரசாணை நெறிமுறைகளின்படி, குத்தகை இனங்களுக்கு வாடகை நிர்ணயித்து, சேவை வரியுடன் வசூலிக்கப்படுகிறது. வாடகை உயர்வு வரும் ஏப்., 1ல் இருந்து அமலாகிறது” என்றனர்.