குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை: ராணிப்பேட்டை நகர்மன்றத் தலைவர்
வரும் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டை நகர மக்களின் தண்ணீர் பிரச்னையை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் கூறினார்.
ராணிப்பேட்டை நகர்மன்ற சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நகர்மன்றத் தலைவர் மேலும் பேசியது:
ராணிப்பேட்டை நகராட்சிக்குள்பட்ட 30 வார்டுகளில் உள்ள 69 ஆழ்துளைக் கிணறுகளில் 47 செயல்பாட்டில் உள்ளன. எஞ்சிய 22 ஆழ்துளைக் கிணறுகளை சீரமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கூடுதலாக 30 ஆழ்துளைக் கிணறுகள் வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
இதன் மூலம் வரும் கோடைக் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.
இக் கூட்டத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு முழு முயற்சி எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் ஜே.பி.சேகர், ஆணையர்(பொறுப்பு) எஸ்.மணி மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.