ரூ.6.9 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
பெருந்துறை தொகுதியில் ரூ.6.9 கோடியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஈரோடு ஆட்சியர் வே.க.சண்முகம் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
நபார்டு நிதி உதவியின் கீழ் பெருந்துறை பேருராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்படும் புதிய கட்டடப் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவமனைக்குச் சென்று சுகாதாரப் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பெருந்துறை-கவுந்தப்பாடி சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பில் சிறப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பராமரிப்புப் பணிகளைப் பார்வையிட்டனர். இச்சாலைப் பணிகளை துரிதமாக முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, இதே சாலைப் பகுதியில் பெருந்துறை பேருராட்சிப் பகுதி சாலை ரூ.1.04 கோடி மதிப்பில் நடைபெறும் சாலை மேம்பாடு, சிறுபாலம் அமைக்கும் பணியையும் அவர் ஆய்வுசெய்தார். தொடர்ந்து, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய்த் திட்டத்தின்கீழ் ரூ.1.58 கோடியில் நடைபெறும் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடப் பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பெருந்துறை பேரூராட்சித் தலைவர் சரஸ்வதி துரைராஜ், பேரூராட்சிகள் துறை செயற்பொறியாளர் மோகன், பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் தன்னாசி, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் எம்.வாணி, பி.தமிழ்ச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.