மழைநீர் வாய்க்கால் பணிகள்: நகராட்சிகள் நிர்வாகப் பொறியாளர் ஆய்வு
மதுரையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளை உரிய காலத்திற்குள் கட்டி முடிக்கும்படி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு நகராட்சிகள் நிர்வாக ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் ஆர். வெங்கடாச்சலம் அறிவுறுத்தினார்.
மதுரை மாநகராட்சியில் ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கோ.புதூர், வில்லாபுரம், டி.பி. சாலை, எப்.எப். சாலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆர். வெங்கடாச்சலம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை விரைவுபடுத்தி உரிய காலத்திற்குள் முடிக்குமாறு மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
மாநகராட்சி தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) மதுரம், செயற்பொறியாளர்கள் அரசு,ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
ஆய்வு குறித்து பொறியாளர் மதுரம் கூறியது: ஜவாஹர்லால் நேரு நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் கான்கிரீட் தடுப்புச்சுவர், தரைத்தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்தப் பணிகள் வரும் 2014 மார்ச் 31 ஆம் தேதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்றார் அவர்.