891 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
காஞ்சிபுரத்தில் 891 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் உள்ள தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தவிர நீண்ட நாள்களாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் நாய்களையும், ஊனமுற்ற நாய்களையும் நகராட்சியே பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2012-13-ஆம் ஆண்டுக்கான நாய்கள் கணக்கெடுப்பின்படி காஞ்சிபுரத்தில் 1,786 தெரு நாய்கள் உள்ளன. நீண்ட நாள்களாக நோய்வாய்ப்பட்ட நாய்களின் எண்ணிக்கை 198 ஆக உள்ளது.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் புளு கிராஸ் அமைப்புடன், நகராட்சி இணைந்து இதுவரை 891 நாய்கள் பிடிக்கப்பட்டு வெறிநாய் தடுப்பூசியும், கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளன.
வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு அதன் உரிமையாளர்கள் நகராட்சியில் உரிமங்களை கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும். தெருநாய் தொல்லை அதிகாமாக இருந்தாலோ, வெறிநாய் மற்றும் நீண்டநாள் நோய்ப்பட்ட தெருநாய்கள் இருந்தாலோ அது குறித்து பொதுமக்கள் நகராட்சியில் புகார் தெரிவிக்கலாம்.
அதன்படி 044-27222801 என்ற தொலைபேசி எண்ணிலோ, 93677 08833 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் என். விமலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டறிக்கை விநியோகத்தை நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார்.