நாய்கள் தொல்லை: நடவடிக்கை தேவை
கோபி நகராட்சிப் பகுதிகளில் நாய்களின் தொல்லைகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வீதியிலும் குறைந்தபட்சம் 10 தெரு நாய்கள் திரிகின்றன. வீதிகளில் நடந்து செல்பவர்களையும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களையும் இவை துரத்துகின்றன. சில நேரங்களில் குடும்பத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள் நாய்கள் துரத்துவதால் கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் நாய்கள் ஊளையிடுவதால் தூங்க முடிவதில்லை என்று பலர் புகார் கூறுகிறார்கள். நாய்க்கடிக்கு அஞ்சி, குழந்தைகளை வெளியில் அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். நகராட்சிக் கூட்டத்தில் இதுகுறித்து பேசுகையில், உடனடியாக நாய்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று நகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்தது.
நகராட்சி நிர்வாகங்கள் புளூகிராஸ் அமைப்புடன் சேர்ந்து தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கோபி நகரில் திரியும் நாய்களை நகராட்சி நிர்வாகம் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.