செவ்வாய்க்கிழமைகளில் “அம்மா’ திட்ட முகாம்கள்
தமிழக முதல்வர் அறிவித்த அம்மா திட்டத்தின்படி மார்ச் 19-ம் தேதி முதல் சென்னை மாவட்டத்தில் “அம்மா’ திட்ட முகாம்கள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக முதல்வர் தொடங்கிய “அம்மா’ திட்டத்தின்படி “அம்மா’ திட்ட முகாம்கள் மார்ச் 19-ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படும். இந்த முகாம்களில் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாதி வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை கோரும் மனுக்கள், துயர்துடைப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை உள்ளிட்டவை தொடர்பான மனுக்களை அளிக்கலாம்.
இந்த முகாம்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களிலும் உள்ள கோட்டங்களில் சுழற்சி முறையில் வாரத்துக்கு 5 கோட்டங்கள் என்ற முறையில் நடத்தப்படும். இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முடிவு செய்ய முடியாத மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும்.
பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள இளநிலை பொறியாளர் அலுவலகம், வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகில் சிவன் கோயில் வடக்கு மாட வீதியில் உள்ள மாநகராட்சி கோட்ட அலுவலகம், நுங்கம்பாக்கம் குட்டி தெருவில் உள்ள இளநிலை பொறியாளர் அலுவலகம், தேனாம்பேட்டை கே.பி. தாசன் சாலையில் உள்ள மாநகராட்சி கோட்ட அலுவலகம் மற்றும் ஜாபர்கான்பேட்டை ராகவ ரெட்டி 2-வது குறுக்குத் தெருவில் உள்ள இளநிலை பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றில் மார்ச் 19-ம் தேதி இந்த முகாம்கள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.