தெருநாய்கள் இருந்தால் தொலைபேசியில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்
தெருநாய்கள் அதிகமாக இருந்தால் தொலைபேசியில் நகராட்சிக்கு தெரிவித்தால் நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவைசிகிச்சை செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியது. அதன்படி கடலூர் நகராட்சி சார்பில் பாபு கலையரங்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ரூ.2.90 லட்சம் செலவில் கருத்தடை அறுவை சிகிச்சை அரங்கு கட்டி செயல்பாட்டுக்கு வந்த சில மாதங்களில் மூடப்பட்டது.
இதனால் கடலூர் நகரில் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. நாய் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகமானது. அதைத் தொடர்ந்து தெருநாய்களுக்கு மீண்டும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, ஏற்கெனவே பாபு கலையரங்கத்தில் கட்டிய, அறுவை சிகிச்சைக் கூடம் ரூ2.5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு, தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவி கூறுகையில், “தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி கடந்த 15-ம் தேதி தொடங்கப்பட்டது.
இரண்டு கால்நடை மருத்துவர்கள், நாய்களைப் பிடிக்க மூன்று ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தெருநாய்கள் அதிகம் இருந்தால் உடனடியாக 230021 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9788553300 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், உடனடியாக அப்பகுதியில் உள்ள நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவைசிகிச்சை செய்யப்படும் என்றார்.