குடிநீர் கட்டண நிலுவையை செலுத்தினால் 30% தள்ளுபடி
குடிநீர் கட்டண நிலுவையை ஜூலை 31-ம் தேதிக்குள்
செலுத்துவோருக்கு, கட்டணத்தில் 30% தள்ளுபடி அளிக்கப்படும் என்று
முதல்வரும், தில்லி ஜல போர்டு தலைவருமான ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தில்லி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
தில்லி ஜல போர்டில் பல்வேறு தகவல்கள் ஆன்லைனுக்கு (நியூ ரெவின்யூ
மேனேஜ்மன்ட் சிஸ்டம்) மாற்றப்பட்டு வருகின்றன. அதனால், குடிநீர்க்
கட்டணத்தைக் கணக்கிடுவதில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளன. அதை சரி செய்யும்
வகையில், குடிநீர் நிலுவைக் கட்டணத்தில் தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது.
நிலுவைக் கட்டணத்தை ஆறு தவணைகளில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள்
செலுத்தலாம்.
தாமதாகச் செலுத்தப்படுவதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
இந்த தவணை முறை வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது.
மறுகுடியமர்த்தப்பட்ட காலனிகளுக்கும், ஜே.ஜே. காலனிகளுக்கும் இந்த தள்ளுபடி
பொருந்தும்.
தாமதமாகச் செலுத்தப்படும் குடிநீர்க் கட்டணத்துக்கு வசூலிக்கப்படும்
கூடுதல் கட்டணம் ஜே.ஜே., மறு குடியமர்த்தப்பட்ட காலனிகள் உள்ள பகுதிகளில்
முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த காலனிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வாரியாகக் குடிநீர் இணைப்புகள் அளிக்கப்பட்டு, குடிநீர் கட்டணம் கணக்கிடப்படும்.
குடிநீர்க் கட்டணத்தை அளவிட அனைவரும் குடிநீர் கட்டண மீட்டரை பொருத்த
வேண்டும். குடிநீர்க் கட்டணம் தொடர்பான புகார்களுக்கு 2361 2222 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
குடிநீர்க் கட்டணத்தை எளிமையாகச் செலுத்த பல்வேறு வசதிகள் செய்து
தரப்பட்டுள்ளன. ஜீவன் மையங்கள், கிúஸாக் மையங்களில் குடிநீர்க்
கட்டணங்களைச் செலுத்த வசதி செய்து தரப்பட்டுள்ளன. குடிநீர்க் கட்டணத்தைச்
செலுத்தவும், குடிநீர் இணைப்பு பெறுவதற்கும், குடிநீர் துண்டிப்புக்கு
விண்ணப்பிக்கவும் ஆன் லைனில் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
குடிநீர்க் கட்டணம் செலுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில் எஸ்எம்எஸ்
பெறும் வசதி இரு மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும் என்று ஷீலா தீட்சித்
கூறினார்.