கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரி குடிநீர் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வீடு, வீடாக குறைகளை கேட்டறிந்து, அமைச்சர் கே.பி.முனுசாமி உறுதி
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் வீடுவீடாக சென்று குறைகளை கேட்டறிந்த தமிழக உள்ளாட்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி விரைவில் காவிரி குடிநீர் பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
குறைகள் கேட்பு
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வீடு, வீடாக குறைகளை கேட்கும் பணியை தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் முனுசாமி மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று 11வது வார்டு முதல் 19வது வார்டு உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஏராளமானோர் குடிநீர் வசதி சாலை வசதி, மின் வசதி, சாக்கடை வசதி, காங்கிரீட் சாலை, குப்பை அகற்றுதல், பட்டா, கழிவறை கட்டிடம், கல்விக்கடன், முதியோர் ஓய்வூதியம், பழுதடைந்த மின் கம்பம் அகற்றுதல், மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரிடம் மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகுதியின் அடிப்படையில் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
காவிரி குடிநீர்
மேலும் பொதுமக்கள் பலர் கால்வாய் வசதி வேண்டி கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கே.பி.முனுசாமி, ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்பு தேவையான இடங்களில் கால்வாய் வசதி செய்துகொடுக்கப்படும் என்றார். மேலும், குடிநீர் வசதி வேண்டி கோரிக்கை விடுத்ததன் பேரில் விரைவில் காவிரி குடிநீர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வரவுள்ளதால் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
குடிநீர் வரத்து குறைவாக வரும் பகுதிகளில் கூடுதலாக பைப்லைன் அமைத்து கொடுக்கவும், ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் டேங் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடுக்கவும், சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்ற தலைவருக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் தங்கமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் வெங்கடாசலம், ஒன்றியக்குழுத் தலைவர் கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர் வாசுதேவன், பெற்றோர்ஆசிரியர் கழக தலைவர் கேசவன், ஆணையாளர் இளங்கோ, தாசில்தார் மகேஸ்வரன், மின்துறை உதவி செயற்பொறியாளர் இளங்கோ மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.