ரூ. 412 கோடி சொத்து வரி வசூல்: மாநகராட்சி தகவல்
2012-13ஆம் நிதியாண்டில் சுமார் ரூ. 412 கோடி சொத்து வரியை சென்னை மாநகராட்சி வசூலித்துள்ளது.
சென்னையில் சொத்து வரி, மாநகராட்சியால் வசூல் செய்யப்படுகிறது. சொத்து வரியை வசூல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிதியாண்டில் ரூ. 500 கோடி வரை சொத்து வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை ரூ. 411.79 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியால் வசூல் செய்யப்பட்ட சொத்து வரியிலே இதுதான் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: இந்த நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், சொத்துவரி வசூல் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் நோட்டீஸ் அளித்தவுடன் வரியை செலுத்திவிடுகிறார்கள். இதுவரையில் சுமார் ரூ. 411.79 கோடி சொத்து வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் இணையதளம் மற்றும் வங்கிகள் மூலமாக ரூ. 9.92 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டு முடிய இன்னும் 6 நாள்கள் இருப்பதால் மேலும் ரூ. 30 முதல் 40 கோடி வரை வசூல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று தெரிவித்தனர். கடந்த 2009-10ஆம் நிதியாண்டில் ரூ. 369.32 கோடியும், 2010-11-ல் ரூ. 373.39, 2011-12-ல் ரூ. 314.55 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ. 18 கோடி அளவுக்கு வரி பாக்கி உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.