ஆதார் அட்டைக்குப் புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்
சிவகங்கை நகராட்சி பகுதிகளில் ஆதார் அட்டைக்குப் புகைப்படம் எடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
அரசு நலத்திட்ட உதவிகள், அரசு சலுகைகளைப் பெறுவதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்காகவும் நாடு முழுவதும் குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது.
இதற்காக சிவகங்கை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் புகைப்படம் எடுக்கும் பணி முடிவடைந்தது. தற்போது நகர்ப்புறங்களில் புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
சிவகங்கை நகராட்சி பகுதியில் முதல் கட்டமாக மூன்று வார்டு பகுதி மக்களுக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது. இது குறித்து சிவகங்கை நகர்மன்றத் தலைவர் எம்.அர்ச்சுனன் கூறுகையில், சிவகங்கை கே.ஆர் மேல்நிலைப் பள்ளியில் முதல் வார்டுக்கும், மருதுபாண்டியர் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு மற்றும் மூன்றாவது வார்டு பகுதி மக்களுக்கும் புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்த வார்டு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுக்கும் மையங்களுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து 10 நாட்கள் இந்த மூன்று வார்டு பகுதிகளிலும் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும். அதைத் தொடர்ந்து நகராட்சியைச் சேர்ந்த பிற வார்டுகளில் புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கப்படும் என்றார்.
சிவகங்கை மருதுபாண்டியர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்துக்கு நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சிவதேவ்குமார் நேரில் சென்று புகைப்படம் எடுக்கும் பணியைப் பார்வையிட்டனர்.