குடிநீர் தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நீரினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
நீரினால் பரவும் பல்வேறு நோய்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுவதைக் கண்காணிக்க வேண்டும். கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை அழிப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்டம் 2023-ன்படி 2015 ஆம் ஆண்டுக்குள் பொது மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரம் மற்றும் தனி நபர் கழிவறைகள் கட்டுவதற்கான புள்ளி விவர சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் பாஸ்கரன்.மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க. வரதராஜன், நகர்மன்றத் தலைவர்கள் சாவித்திரி கோபால், (தஞ்சாவூர்), ரத்னா சேகர் (கும்பகோணம்), ஜவகர்பாபு (பட்டுக்கோட்டை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.