செந்தாரப்பட்டி பேரூராட்சியில் கிணற்றை தூர்வார ஆட்சியர் உத்தரவு
தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி பேரூராட்சியின் 6வது வார்டு அதிமுக துணைத்தலைவர் துரை நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தார். அதில், செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதன் பேரில், மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் நேற்று செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலம் சென்று செயல்அலுவலர் வசந்தாவிடம் விசாரணை நடத்தினார். பின் 15வது வார்டு பகுதியில் உள்ள ஊர் பொதுக்கிணற்றை பார்வையிட்ட ஆட்சியர், குடிநீர் ஆதாரத்திற்காக உடனடி யாக கிணற்றை தூர்வார உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தம்மம்பட்டிக்கு ஆட்சியர் சென்றார். அங்கு தம்மம்பட்டி பேரூராட்சி உடையார்பாளையத்தில் இருந்து கிழக்கு காந்திநகர் வரை 2 கி.மீ தூர சாலை, அறிஞர் அண்ணா மண்டபத்திலிருந்து நெய்வேலிகாரர் தோட்டம் வரையிலான 3 கி.மீ தூர சாலை பணிகள் துவக்கப்பட்டு 4 மாதமாகியும் முடிவடையாமல் உள்ளது. இச்சாலைப்பணிகளை விரைந்து முடிக்க தம்ம்பட்டி செயல்அலுவலர் கவுதமனிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.