மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஜரூர் “ஆக்கிரமிப்பு’ வணிக நிறுவனங்கள் கலக்கம்
சேலம்: சேலம் மாநகராட்சியில், மழை நீர் வடிகால் அமைக்கும், பணியில் அதிகாரிகள் ஜரூராக ஈடுபட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு வணிக நிறுவனங்கள், கலக்கம் அடைந்துள்ளன.
சேலம் மாநகராட்சியில், சாக்கடை கழிவுகளை முறையாக வெளியேற்றும் நோக்கத்தில், பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகரில், பல இடங்களில் ஏற்கனவே உள்ள, வடிகால்கள் மிகவும் சீரழிந்தும், அடைப்பு ஏற்பட்டும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
சீரழிந்த இடங்களை தேர்வு செய்து மழைநீர் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில், மொத்தம், 40 இடங்களில், மூன்று கோடியே, 64 லட்சம் ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது. கடந்த சில நாட்களாக, பல வார்டுகளில், பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல இடங்களில், வடிகால்களை ஆக்கிரமித்து, சிமென்ட் சிலாப், பெட்டி கடைகள், மரம், செடி உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம், ஆக்கிரமிப்புக்களை அகற்றி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஜரூராக ஈடுபட்டு வருகின்றனர்.
குடியிருப்பு வீடுகள் உள்ள பகுதிகளில் மட்டும் அல்லாமல், நகர பகுதியிலும், வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன், அப்ஸரா இறக்கம் பகுதியில், வடிகால்களை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த வணிக நிறுவனங்களின் மேற்கூரைகள், சிமென்ட் சிலாப்புகள் ஆகியவற்றை அதிகாரிகள், அதிரடியாக அப்புறப்படுத்தினர்.
நேற்று, புது பஸ் ஸ்டாண்டு, எதிரே உள்ள அத்வைத ஆஸ்ரம ரோட்டில், மழைநீர் வடிகால் அமைப்பதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம், வணிக நிறுவனங்கள் கடைக்குள் நுழைவதற்காக, போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள், அதிரடியாக அகற்றப்பட்டது.
பெரும்பாலான வணிக நிறுவனங்கள், வடிகால்கள் மற்றும் மாநகராட்சி நிலங்களை ஆக்கிரமித்து, வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது, வடிகால் அமைப்பதற்காக, மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கியிருப்பதால், கலக்கம் அடைந்துள்ளனர்.